search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீதா லவ குச கோவில்"

    ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.
    ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.

    தல வரலாறு :


    ராமனைப் பிரிய மனமில்லாமல் முதல் முறையாக காட்டிற்குச் சென்ற சீதை, இரண்டாவது முறை தன்னுடைய பிரியத்திற்குரிய ராமனாலேயே காட்டிற்கு அனுப்பப்பட்டாள். அப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்த அவள், அங்கிருந்த வான்மீகி ஆசிரமத்தை அடைந்தாள். அங்கு அவருக்கு லவன், குசன் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். வான்மீகி முனிவர், அவர்களிருவருக்கும் வில்வித்தை உட்பட அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார். சிறு வயதிலேயே அவர்கள் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ச்சியடைகின்றனர்.

    வான்மீகி முனிவர் அச் சிறுவர்களுக்கு அயோத்தி அரசன் ராமன்தான் அவர்களின் தந்தை என்பதைச் சொல்லாமல், ராமன் கதையைப் பாடலாகச் சொல்லிக் கொடுக்கிறார். அச்சிறுவர்களும் வீணையை மீட்டியபடி ராமன் கதையை அவ்வப்போது பாடலாகப் பாடி மகிழ்வார்கள். ஒரு கட்டத்தில் ராமன், தன்னுடைய மனைவியையே காட்டிற்கு அனுப்பியவர் என்று அறிந்து அந்தச் சிறுவர்கள், ராமனை வெறுக்கிறார்கள்.

    இந்நிலையில் ராமன், அசுவமேத யாகத்திற்காக, உலகைச் சுற்றி வர பதினாறு குதிரைகளைத் தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறார். அந்தப் பதினாறு குதிரைகளும் அவைகளுக்கான குறிப்பிட்ட இலக்கைச் சுற்றித் திரும்பி வந்தவுடன், அவற்றை யாகத்தில் பலியிட்டு யாகத்தை நிறைவு செய்ய வேண்டும். ராமனால் அனுப்பப்பட்ட பதினாறு குதிரைகளில் ஒரு குதிரை மட்டும் திரும்பி வரவில்லை.

    அந்தக் குதிரையைச் சிறுவர்களான லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டி வைத்து விட்டனர். குதிரையுடன் பாதுகாப்புக்காக வந்த ராமனின் சகோதரன் சத்துருக்கனன் மற்றும் அவனுடன் வந்த படையினர், குதிரையை விடுவிக்கும்படி கேட்டும் அவர்கள் விடவில்லை. வில் வித்தையில் சிறந்து விளங்கிய அந்தச் சிறுவர்கள், ராமரின் பாதுகாப்பு படையினரால் வெல்லவும் முடியவில்லை.

    அதனைத் தொடர்ந்து, லட்சுமணன் அந்த இடத்திற்கு வந்து சிறுவர்களிடம் போரிட்டான். அவனாலும், சிறுவர்களிடம் இருந்து குதிரையை மீட்க முடியவில்லை. இறுதியாகக் குதிரையை மீட்க ராமனே அவ்விடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த சீதாதேவியை கண்ட ராமன், அவரை நெருங்கிச் சென்றார். ஆனால், சீதாதேவி அந்த இடத்திலேயேப் பூமிக்குள் சென்று மறையத் தொடங்கினார்.

    ராமன் அந்த இடத்திற்குச் சென்ற போது, அவருக்குச் சீதா தேவியின் தலையிலிருந்த சில முடிகள் மட்டுமே கையில் அகப்பட்டன என்றும், அந்த இடமே ‘சேடட்டின்காவு’ அல்லது ‘ஜடாயட்டக்காவு’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த இடத்தில் அமைந்திருக்கும் கோவிலில் சீதாதேவி சப்தமாதர்களுடன் வீற்றிருக்கிறார். இந்தக் கோவிலே சீதாதேவியின் மூலக்கோவில் என்று சொல்லப்படுகிறது.

    பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா என்பவர், மூலக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகச் சீதாதேவியுடன் லவன், குசன் ஆகியோரையும் சேர்த்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அக்கோவிலேத் தற்போது புகழ் பெற்ற சீதாதேவி, லவன், குசன் கோவிலாக இருக்கிறது என்கிறது தல வரலாறு.



    கோவில் அமைப்பு :

    புதிய கோவில் கருவறையில் சீதாதேவி கிழக்கு நோக்கிய நிலையிலும், லவன், குசன் இருவரும் மேற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் வேட்டக்கொரு மகன், கணபதி, சுப்பிரமணியன், ஐயப்பன் மற்றும் நாக தேவதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. சேடட்டின்காவு என்ற இடத்தில் அமைந்திருக்கும் சீதாதேவியின் மூலக்கோவிலில் சீதாதேவி, சப்தமாதர்கள், கணபதி, வீரபத்திரன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

    இவை தவிர, லவன், குசன் சிறுவர்களாக வளர்ந்த இடம் சிசுமலா என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் சசிமலா என்று பெயர் மாற்றம் பெற்ற இடம், லவன், குசன் விளையாடிய இடம், வான்மீகி ஆசிரமம் போன்ற ராமாயணத்துடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களாக அமைந்திருக்கின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். சீதாதேவியின் மூலக்கோவில் (சேடட்டின்காவு மூலக்கோவில்) காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    வழிபாடும்.. பலனும்..

    இக்கோவிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 18 முதல் 23 வரையிலான நாட்களில் ‘சுட்டு விளக்குத் திருவிழா’ எனப்படும் சிறப்புத் திருவிழா நடைபெறுகிறது.

    சீதாதேவி, லவன், குசன் கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. சீதாதேவிக்கு வெள்ளை அரிசிச் சாதம் மற்றும் பாயசமும், லவன், குசனுக்கு இனிப்பு அப்பமும் படைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

    அமைவிடம் :


    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருக்கும் புல்பள்ளி என்னும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோழிக்கோடு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுல்தான் பேட்டரி என்ற ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மீனங்காடி என்ற இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு-மனந்தாவடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பனமரம் என்ற பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புல்பள்ளி இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. 
    ×